உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நிர்ணயித்தவாறு நடத்துவதற்கு நடவடிக்கை
எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சுதந்திரமாகவும் நீதியாகவும் தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (05.06) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியர்சர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிர்ணயித்தவாறு நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்கப்படாமையால் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாடத்துவது தொடர்பான அனைத்து தீர்மானங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.