சர்வதேச உறவுகளை உள்நாட்டு அரசியலுக்கு பயன்படுத்தும் ரணில்; முயற்சி வெற்றிபெறுமா?

சர்வதேச உறவுகளை உள்நாட்டு அரசியலுக்கு பயன்படுத்தும் ரணில்; முயற்சி வெற்றிபெறுமா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு வருமாறு அழைத்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை தமக்கான வாக்காக மாற்றுவது என பரவலாக பேசப்படுகிறது.

இதற்கான யுக்திகளையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உகாண்டாவில் நடைபெற்ற தெற்கு உச்சி மாநாட்டில் பலஸ்தீன அரசு அமைப்பது தொடர்பான ரணில் மற்றும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் இடையிலான உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், காசாவுக்கான நிதியுதவியும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

2002 மற்றும் 2015 – 2019 ஆகிய ஆண்டுகளுக்குட்பட்ட ஆட்சிக் காலங்களில் ரணிலின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு குறித்து முஸ்லிம் சமூகம் கவலை கொண்டிருந்தது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு ரணிலின் நிர்வாகம் தவறிவிட்டதாக முஸ்லிம் மக்களிடையே குற்றச்சாட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க சார்பு விம்பத்தை வைத்து சிங்கள மக்களை வெற்றிகொள்ள முயற்சித்தார்.

இருப்பினும், முஸ்லிம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதை உணர்ந்ததன் காரணமாக ஈரான் ஜனாதிபதியின் பயணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டதாக விமர்சிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகள் மூலம் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகளை வெல்ல முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது.

ஆனால், ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் சீனா மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நீருக்கடியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் மீண்டும் ஆதரவளிக்கும் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஜப்பான் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை ஜப்பான் இலங்கையில் திட்டங்களை ஆரம்பிக்காது என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆகவே, சர்வதேச உறவுகளை உள்நாட்டு அரசியலுக்கு பயன்படுத்தும் ரணிலின் முயற்சி வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

CATEGORIES
Share This