296 இடங்களில் வெற்றி: கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதாஇந்திய நாடாளுமன்ற தேர்தல் – முக்கிய விபரங்கள்
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன.
தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.
ஆளும் பா.ஜனதாவும் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்தது.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் நாடு முழுவதும் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரசாரத்தின் தாக்கம், கோடை வெயிலைவிட அனல் பறந்தது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாறி மாறி முன்னிலை
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது.
அதே நேரம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியும் பல இடங்களில் முன்னிலை வகித்தது. இரு கூட்டணிகளும் பல இடங்களில் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
பா.ஜனதா அமோகம்
வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 239 இடங்களை கைப்பற்றியுள்ளது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
40 தொகுதிகளை அள்ளிய தி.மு.க கூட்டணி
எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும்பான்மை இல்லை
புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 239 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.
எனவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பா.ஜனதா இன்று (புதன்கிழமை) கூட்டியுள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.