’செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன்’

’செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன்’

மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில் நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ருவன்வெல்ல இல்லத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெருந்திரளான பிரதேச மக்களும் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் பாதையின் இருமருங்கிலும் கூடியிருந்ததோடு மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இதேவேளை, ருவன்வெல்லவிலுள்ள தனது கொள்ளுப்பாட்டியின் வளவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்ததோடு அங்கு சிறிது நேரத்தை களித்தார்.

முன்னதாக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,

மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்த ஒரு நாட்டை நாங்கள் பொறுப்பேற்றோம். ஏனைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில், நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன். அது மட்டுமன்றி, சரியான கொள்கையின்படி செயற்பட்டோம். அதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்தோம். இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மிகவும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. வரி அதிகரிப்பு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால் அது மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே வழியாக விளங்கியது என்றார்.

CATEGORIES
Share This