சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்; இந்திய பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்; இந்திய பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு

முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாசார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மையம் மூலம், திருக்குறள் சிறப்பு, தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாசார சிறப்புகள் குறித்து வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் கலாசார மையம் அமைப்பதற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.

CATEGORIES
Share This