மயிலத்தமடுவில் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டும் மின்வேலியை பயன்படுத்தியும்கொலை செய்கின்றனர்; மனிதர்களை போல அவற்றையும் காணாமலாக்குகின்றனர்

மயிலத்தமடுவில் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டும் மின்வேலியை பயன்படுத்தியும்கொலை செய்கின்றனர்; மனிதர்களை போல அவற்றையும் காணாமலாக்குகின்றனர்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனைபகுதியில்  அத்துமீறி குடியேறியவர்களின் அக்கிரமங்கள் இன்றுவரை தொடர்கின்றன, பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் இவர்கள் தங்கள்  அநீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர், பண்ணையாளர்களின் போராட்டம் 270 நாட்களை கடந்து எந்த தீர்வும் இன்றி தொடர்கின்றது என  மட்டக்களப்பு மாவட்ட  சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஒன்றியத்தின்  தலைவர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்

கொழும்பு தேசிய கிறிஸ்தவ சங்கத்தில் இடம்பெற்ற மட்டகளப்பு மயிலத்தமடு பால்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பான உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்

மனிதர்களை போல கால்நடைகளும் காணாமல் ஆக்கப்படுகின்றனர், அவற்றை கொலை செய்கின்றனர் ,உணவிற்குள் வெடிபொருட்களை வைக்கின்றனர், கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்கின்றனர்,  துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர் என அவர் தெரிவித்தார்

சிவயோகநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை நீண்ட வரலாற்றை கொண்ட பகுதி  ஐந்து தலைமுறைக்கு மேல் அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் அதிகாரிகளின்  அனுமதியுடன் கால்நடை வளர்ப்பிற்காக ஒடுக்கப்பட்ட  இடம் அது.

2009ம் ஆண்டுக்கு பின்னரே இந்த பிரச்சினை உருவானது.

2013 வரை அந்த பகுதி மக்கள் எந்த பிரச்சினையும் இன்றி வாழ்ந்தனர்.

2013 முதல் 2016 வரை  இதேமாதிரியான  திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெற்றன – அரசநிகழ்ச்சி நிரலின் கீழ் இவை முன்னெடுக்கப்பட்டன.

கால்நடைகளை வளர்ப்பதில் பண்ணையாளர்கள்  பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

அதன் பின்னர் 2015  ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாகியது –  கிழக்கு மாகாண சபையின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரான துரைராஜசிங்கத்தினால் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக 2017 இல் அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

2019 இல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகும் வரை சுமூகமான நிலையே இந்த பகுதியில் காணப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக  அனுராத ஜகம்பத் நியமிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து மீண்டும் முன்னரை போன்று குடியேற்றங்கள் ஆக்கிரமிப்புகள்  ஆரம்பமாகின அவை இன்றுவரை தொடர்கின்றன.

இதற்கு எதிரான பண்ணையாளர்களின் போராட்டம் 270 நாட்களை கடந்து இன்றும் நீடிக்கின்றது.

ஆரம்பகாலத்தில் கால்நடைகள் துன்புறுத்தப்பட்டன காணாமலாக்கப்பட்டன.

மனிதர்களை போல கால்நடைகளும் காணாமலாக்கப்படுகின்றன.

கால்நடைகளை கொலை செய்கின்றனர் சட்டவிரோத மின்வேலிகளை அமைத்து அவை அதில் சிக்குப்படும் நிலையை உருவாக்குகின்றனர்.

உணவிற்குள் வெடிபொருட்களை வைக்கின்றனர், கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்கின்றனர்,  துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர்.

இதுவரை 400க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் மேய்ச்சல் தரையில் கால்நடைகளை வளர்க்க முடியாததால் பண்ணையாளர்கள் காடுகளிற்கும் பாலைநிலங்களிற்கும் அவற்றை கொண்டு செல்கின்றனர்.

அங்கு போதிய உணவு இல்லாததால் அவை உயிரிழக்கின்றன.இவ்வாறு 1400க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மயிலத்தமடு மாதவனைக்கு நான்கு  திணைக்களங்கள் உரிமை கோருகின்றன-  இந்த நான்கு திணைக்களங்களும் பண்ணையாளர்களை வஞ்சிக்கின்றன.

பண்ணையாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்படுகின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களம்  வன இலாகா  தொல்பொருள் அபிவிருத்தி திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவே இவ்வாறு  பண்ணையாளர்களை வஞ்சிக்கி;ன்றன.

பண்ணையாளர்கள் அந்த பகுதியில் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்  காட்டு விலங்குகளிற்கு  பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என பொய் வழக்கை போடுகின்றனர்.

பண்ணையாளர்களை வெளியேற்ற ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட கட்டமைப்பை பயன்படுத்துகின்றனர்.

மட்டக்களப்பில் ஏழு இலட்சம் கால்நடைகள் உள்ளன மயிலத்தமடு மாதனையில் மாத்திரம் 3 இலட்சம் கால்நடைகள் உள்ளன  பெரும்போகத்தின்போது மேலும் ஒருஇலட்சம் கால்நடைகள் இந்த பகுதிக்குசெல்வது வழமை.

மட்டக்களப்பிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலின் அளவு பல மடங்காக குறைவடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

பாரம்பரிய கால்நடைகளை  அழித்தால் மீண்டும் அவற்றை உருவாக்க முடியாது, நல்ல இனகறவை மாட்டை அழித்துவிட்டு  வெளிநாட்டிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்ய முயலக்கூடும்.

எங்கள் காளைகள அழிந்தால் அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது.

இது ஒருவகை அரசியல் முதலீடு  – இனவாதத்தில் முதலீடு செய்யும் நடவடிக்கை,விவசாய குடியேற்றங்களை  உருவாக்கி  சமூகங்களிற்கு இடையில் முரண்பாடுகளை  ஏற்படுத்தி  அரசியல் இலாபம் சம்பாதிக்க முயல்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கதைத்துவிட்டோம்.

ஜனாதிபதி விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை,சர்வதேச சமூகத்திற்கு கடிதங்களை அனுப்பினோம், வெளிநாட்டு ஊடகங்களிற்கு தெரிவித்தோம், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தோம்.

தென்ஆபிரிக்காவினதும் ஜப்பான் சுவிட்சர்லாந்தினதும் தூதுவர்கள் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிக்கு வந்து சந்தித்துவிட்டு சென்றனர்.

ஆனாலும் இன்றுவரை போராட்டம் தொடர்கின்றது எந்ததீர்வும் கிட்டவில்லை.

சிவில் சமூகத்தினர் சிஎச்ஆர்டி ஊடாக  அதிகாரிகளிற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதிகாரிகள் தான் கால்நடைகளை அங்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் தற்போது ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இல்லை என தெரிவித்த மக்கள் அதிகாரிகளிற்கு எதிராக நீதிமன்றம் சென்றனர்.

மகாவலி அதிகார சபைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன்  தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்கள்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம் சாணக்கியன் சார்பில் கொழும்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு 2022 இல் வழங்கப்பட்டது, அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு மாகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த பகுதியில் பொலிஸாரின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

பண்ணையாளர்கள் அங்கு அடையாள அட்டை கெடுபிடிக்குள்ளாக்கியுள்ளனர்.

சிவில் சமூகத்தினர்  ஊடகவியலாளர்கள் ஏனையவர்கள் அங்கு  செல்வதற்கு அனுமதி மறுக்கின்றனர்.

நீதிமன்றங்களின் கட்டளைகளை சட்டங்களை  புறக்கணிக்கின்றனர்  சட்டத்தை மதிக்கின்றார்கள் இல்லை.

அத்துமீறி குடியேறியவர்களின் அக்கிரமங்கள் இன்றுவரை தொடர்கின்றன.பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் இவர்கள் தங்கள்  அக்கிரமங்களை முன்னெடுக்கின்றனர்.

இதுதான் இந்த நாட்டில் ஆட்சியின் நிலைமை வடக்கிலும் இதே அடக்குமுறையின் கீழ்தான் மக்கள் வாழ்கின்றனர்.ஆறு மாதங்களாக பால் கறக்காத நிலை காணப்படுகின்றது.

போதிய உணவின்றி மாடுகள் உயிரிழக்கின்றன அவற்றிற்கு போசாக்கான உணவு கிடைப்பது கடினமான விடயமாக  காணப்படுகின்றது.

மாடுகள் குறைமாத கன்றுகளை ஈனுகின்றன, சில மாடுகள் எழுந்து நிற்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு சில நாட்களில் இறந்துவிடுகின்றன.

இந்த கால்நடைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது கொண்டுபோக முடியாது  இவை ஒரு பாரம்பரிய இனத்தை சேர்ந்தவை மூன்று நான்கு தலைமுறைகளாக  அந்த பகுதியிலேயே வாழ்ந்தவை  அவை அங்குதான் வாழும் .

மேலும் அவைகளிற்கு ஏற்ற விதத்தில் புதிய இடங்களை கண்டுபிடிக்க முடியாது மயிலத்தமடுவில் கால்நடைகளிற்கான அனைத்து வளங்களும் உள்ளன இது வேறு இடத்தில் கிடைக்காது.

CATEGORIES
Share This