ரணிலின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக பொலிஸ் உறுப்பினர்கள்?: தொடரும் அரசியல் காய்நகர்தல்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து குறைந்தது 5 குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி நாளை (06) புத்தலவில் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக குறைந்தது 4,000 பேரை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக பொலிஸ் குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவையான அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும்.
இதன் காரணமாக, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களிடம் சென்று பணத்தைக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மற்றுமொரு படி முன்னேறி எதிர்வரும் 14ஆம் திகதி கண்டி, கெடம்பையில் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் குறைந்தது 10,000 பேர் பங்கேற்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள சமூக பொலிஸ் குழுக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் , மதிய உணவு வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும், கூட்டங்களுக்கு நாற்காலிகள் வழங்கும் பொறுப்பும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ உத்தரவு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதாகவும் அது போலியானது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், போலியானது என உத்தியோகபூர்வமாக கூறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவே அவ்வாறே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.