பொதுத் தேர்தலுக்கு இன்னும் 135 நாட்கள் மாத்திரமே: ஜனாதிபதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 135 நாட்கள் மாத்திரமே: ஜனாதிபதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் 48 மணித்தியாலங்களுக்குள் பதவிப் பிராமணம் செய்து கொண்டவுடன் பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பெரும்பாலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த வாரத்துக்குள்ளேயே பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

அவ்வாறெனில், பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த இன்னும் குறைந்தது 135 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இவ்வாறு நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினால் தற்போது நாடாளுமன்றத்தில் காணப்படக்கூடிய அதிகளவான உறுப்பினர்கள் தோற்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாக அநேக புது முகங்கள் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தர வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

அதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் குறித்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதல் இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகிறது.

ஆய்வுகளின்படி, பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அதில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இரண்டாம் இடத்தை வகிக்கும் என சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது இடத்தில் ஜேவிபி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

2001ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜேவிபி 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் தற்போது அது 20ஆக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நான்காவது இடத்தை வகிக்கும் கட்சி குறைந்தது இரு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் அதில் ஒன்று தேசியப் பட்டியலில் இடம்பிடிக்கும் எனவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், வடக்கின் பிரதான கட்சிகளான தமிழ் தேசியக் கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This