ஜனாதிபதியாக வருபவர் சிறுபான்மை மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவுக்கு வருவாரேயானால் அவருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த நாடு சுபீட்சமாக பொருளாதார ரீதியாக மீண்டெழ வேண்டுமென்றால், ஜனாதிபதியாக வருபவர் சிறுபான்மை மக்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவாரேயானால் நாங்கள் அவர்களுடன் பேசுதற்குத் தயாராக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.
பொதுஜனப் பெரமுன கட்சி தற்போதைய நிலையிலே ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. பொதுஜனப் பெரமுனவை ஆதரித்து அவர்களுடைய வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் அளவிற்கு இந்த நாட்டு மக்கள் தயாராகவும் இல்லை. ஏனெனில் 69 இலட்சம் வாக்குகளைக் கொடுத்து பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 2019 இறுதிக் காலகட்டத்திலே ஜனாதிபதியாக்கிய அதே சிங்கள மக்கள் இரண்டு வருட காலத்திற்குள் அவரை துரத்தியடித்தார்கள். அந்த நிலை தற்போதும் சிங்கள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிக்கின்றது.
பொதுஜனப் பெரமுன கட்சி ஆதரரிக்கும் ஒருவர் சிலவேளை ஜனாதிபதியாக வருவதற்குரிய சந்தர்ப்பம் இருக்கின்றது. ஏனெனில் பொதுஜனப் பெரமுனவிற்கு ஒரளவிற்கு கணிசமான வாக்குகள் இருக்கலாம். ஆனால் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பேருக்கு மேல் போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இந்நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து, ஐம்பது வீதத்திற்கு மேலே வாக்குகளைப் பெறமுடியாத நிலையில் இருப்பார்கள். இந்த வேளையில்தான் மலைய மக்கள் உட்பட, தமிழ் முஸ்லிம், வாங்கு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.
இந்த நாடு சுபீட்சமாக பொருளாதார ரீதியாக மீண்டெழ வேண்டுமென்றால், ஜனாதிபதியாக வருபவர் சிறுபான்மை மக்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவாரேயானால் நாங்கள் அவர்களுடன் பேசுதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பள்ளை மோகன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.