ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: கொள்கை ரீதியில் இணக்கம் என்கிறார் சுரேஷ்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் எனவும் அதனை மாற்ற யாராலும் முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
பலரும் பல விதமான கதைகளை கூறினாலும் அரசியலமைப்பை மாற்றியமைக்க யாராலும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வடக்கின் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியான அபிலாஷைகள் காணப்படுவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதி பொது வேட்பாளரை பிரநிதித்துவப்படுத்தும் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் ஒன்றிணையும் போது தென்னிலங்கை அரசியல் களம் வழமைக்கு மாறாக சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி தீர்மானித்திருந்தது.
தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் குறித்த சிங்கள அரசியல் தலைவர்களின் அச்சமே தற்போது வடக்கு நோக்கி அவர்கள் படையெடுப்பதற்கான காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.`