தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பிரச்சார நிதிச் சட்டம்; ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட ஏற்பாடா?
இலங்கைத் தீவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது குறித்து ஏற்கனவே சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியமானது ஏற்கனவே கள நிலவரத்தை மதிப்பீடு செய்வதற்காக தனது அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக நேற்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக இலங்கையில் தேசிய தேர்தல்களை கண்காணிப்பதற்கக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும் மதிப்பிடுவார்கள்.
இந்நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பிரச்சார நிதிச் சட்டம் (Campaign Finance Act) இலங்கையில் முதன்முறையாக அமுல்படுத்தப்படப்போகிறது என்பதால் இந்த ஜனாதிபதி தேர்தல் விசேடமானதாகக் கருதப்படுகிறது.
மேற்குறித்த புதிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது கடந்த காலங்களில் தேர்தல்களை கண்காணித்த ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்களின் பரிந்துரையாகவும் இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தம்மை சந்தித்ததை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க உறுதி செய்துள்ளார்.
‘தேர்தலுக்கு முந்தைய நிலைமைகளை மதிப்பிடுவது குறித்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்’ என்றும் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிக்க வல்லுநர் குழுவொன்று நாட்டில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.