அனுராதபுரத்தில் மொட்டுக்கட்சி; பொலன்னறுவையில் ஜேவிபி; கட்சித் தாவலில் உறுப்பினர்கள்

அனுராதபுரத்தில் மொட்டுக்கட்சி; பொலன்னறுவையில் ஜேவிபி; கட்சித் தாவலில் உறுப்பினர்கள்

விரும்பியவர்களுக்கு வந்து செல்ல கட்சியின் கதவுகள் சலூன் கடை கதவுகளைப் போல திறந்தே இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு செல்வது எந்த விதத்திலும் தமக்கு சவாலாக அமையாது என அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களும் அரசியலமைப்பு ரீதியாக நடத்தப்பட வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச நேற்று (26) அனுராதபுர நகரில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார் என்ற கூற்றை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு சென்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பொலன்னறுவைக்கு சென்றுள்ளார்.

அதன்போது, ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார் என்ற கூற்றை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மறுத்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் ஜே.வி.பி உறுப்பினர் அல்ல, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில், இலங்கையில் அதிகளவிலான மக்கள் பலம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காணப்படுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார்.

அதில் மாகாண மட்டத்தில் மொட்டுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This