(PHOTOS) முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.
அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர்.
அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.