நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்

நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்

image

தமிழர்களை நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும்-என ஹாஸ்டக் ஜெனரேசன் தெரிவித்துள்ளது

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை வாழ் தமிழர்களின் கூட்டு நினைவுகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி முக்கிய பங்குவகிக்கிறது. இது இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் அனுபவித்த சொல்லெண்ணாத் துயரத்தையும், மீண்டெழுதலையும் அடையாளப்படுத்துகிறது. மே 2009, முல்லைத்தீவின் No-fire zone இல் 150,000 – 190,000 வரையான தமிழ்மக்கள் சிக்குண்டிருந்தனர், தொடர் குண்டுத்தாக்குதல்களால் இந்தப்பிரதேசத்தில் பசியும் சாவும் நிறைந்திருந்தது. அரிசியும், தண்ணீரும், கையிருப்பிலிருந்த உப்பும் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்தக் கஞ்சி, 15 வருடங்களுக்கு முதல் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்காப்பானக இருந்தது. இதுவே ஒரு அடக்கப்பட்ட சமூகத்தின் பிழைத்தலுக்கும் ஒருங்கிணைப்புக்கும் அடையாளமானது.

படுகொலைசெய்யப்பட்ட, வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர்களை நினைவுகூருவதில் அரசின் கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து பகிர்ந்தளித்தல் நினைவேந்துதலின் வலிமையான செயற்பாடாகும். இது ஒரு சடங்காக, ஒரு சமூகத்தின் ஒன்றுபடும் சமூக உணர்வையும், சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வின் தேவையையும் வலியுறுத்துகிறது.

பாதிப்புக்குள்ளானவர்களின் அனுபவங்களை அங்கீகரிப்பதும், அவர்களின் நினைவுகளை பாதுகாப்பதும் இன நல்லிணக்கத்தின் முக்கிய கூறுகளாகும். மக்கள் தங்களுடைய துயர் பகிர்ந்து , படுகொலைசெய்யப்பட்ட உறவுகளையும், கசப்பான நினைவுகளையும் நினைவுகூருவதற்கான இடமொன்றை, வெளியொன்றை உருவாக்குதலே இதுபோன்றதொரு பெருந்துயரம் மீண்டும் நடப்பதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகும். நல்லிணக்கமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப கடந்தகாலத்தை எப்பொழுதும் நினைவுகூருதல் வேண்டும்.இலங்கைவாழ் தமிழர்களின் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளே இலங்கையில் சமத்துவமும் இன நல்லிணக்கமும் ஏற்படுவதற்கு இன்றியமையாதவையாக அமையக்கூடியன என்பதை அனைத்து இன மத சமூக குழுமங்களும் புரிந்துகொள்ள வேண்டும்

CATEGORIES
Share This