குடும்பமொன்றுக்கான மாதாந்த செலவு சுமார் ஒரு இலட்சமாக அதிகரிப்பு; ஈடுகட்ட முடியாத நிலையில் நாட்டு மக்கள்
இலங்கையில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் நுகர்வு செலவு 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நூற்றுக்கு 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், இந்நாட்டில் குடும்பமொன்றுக்கு 2022ஆம் ஆண்டில் மாதாந்த நுகர்வு செலவு 88,704 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதாந்த நுகர்வு செலவு
2023ஆம் ஆண்டில் குடும்பமொன்றுக்கான மாதாந்த நுகர்வு செலவு 103,283 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் ஒரு குடும்பமானது உணவு அல்லாத பொருட்களுக்கு அதிகம் செலவிட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டில் இந்நாட்டில் குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவில் 53.9 வீதம் உணவு அல்லாத பொருட்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
மாதாந்த நுகர்வு செலவில் 46.12 வீதம் மாத்திரமே உணவுக்காக செலவிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்நாட்டில் குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவில் 56.2 வீதம் உணவு அல்லாத பொருட்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
அதே ஆண்டில் உணவுக்காக 43.8 வீதம் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விலை அதிகரிப்பானது குறைவான மட்டத்திலேயே காணப்பட்டு வருகின்றது.
பண வீக்கம்
உள்நாட்டில் போதியளவான பொருட்கள் உற்பத்தி செய்யாமையால் அல்லது மக்களுக்குத் தேவையானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமையினால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனாலும் பொருட்களுக்கான விலை அதிகரிக்கிறது.
பொதுவாக பண வீக்கமானது வருடம் ஒன்றுக்கு 2 வீதம் அதிகரிப்பை கொண்டிருக்கும்.
இலங்கையில் பண வீக்கம்
கொவிட் 19 பரவலுடன் நாட்டில் பணவீக்கம் என்பது ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து ‘அரகலய‘ போன்ற காரணங்களால் பல அரசியல் மாற்றங்களாலும், வெளிநாட்டு வருவாய் இல்லை போன்றவை பண வீக்கத்துக்கு சாதமாக அமைந்தன.
சுற்றுலாத்துறை வீழ்ச்சி இதற்கு அதிகளவில் பாதித்தது.
தற்போதைய நிலை
தற்போது இலங்கைத்தீவு பொருளாதார ரீதியாக வலுவடைந்து வந்துக்கொண்டிருக்கும் நிலையில் தனிமனிதனால் அதனை ஈடுகட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
நுகர்வு செலவு அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்ததும் குழந்தைப் பிறப்பு வீதம், விவாகரத்து வீதம் அதிகரிப்பதற்கான அடிப்படையாக இவ்வாறான பொருளாதார நெருக்கடி அமைந்துள்ளது சமூக ஆர்வலர்களின் கருத்து.