வட, கிழக்கிலுள்ள முக்கிய இடங்களை இந்தியாவுக்கு வழங்க அரசியல் கட்சிகள் முயற்சி என கலிலூர் ரஹ்மான் குற்றச்சாட்டு..

வட, கிழக்கிலுள்ள முக்கிய இடங்களை இந்தியாவுக்கு வழங்க அரசியல் கட்சிகள் முயற்சி என கலிலூர் ரஹ்மான் குற்றச்சாட்டு..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நமது அண்டை நாடான இந்தியாவை அண்மித்த மாகாணங்களாகும்.

எனவே, அந்த மாகாணங்களில் இத்தகைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பது புத்திசாலித்தனம் அல்ல. அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகும்.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினால் அண்மைய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாமல் உள்ள சூழ்நிலையை சீரமைக்க இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கில் உள்ளதை காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்குக்கு விஜயம் செய்து குறித்த துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக செய்திகளினூடாக அறிந்துகொள்ள முடிந்தது.

எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா? என்பதை அரசாங்கம் பரிசீலித்து, இந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் எடுத்து, அபிவிருத்தி செய்து, அதனை முதலீட்டு திட்டங்களுக்குத் திறந்து, அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்துக்களோ நாட்டின் இறையாண்மைக்கு பங்கமோ வந்துவிடாத வகையில் பாரபட்சமில்லாது வெளிநாட்டுத் திட்டத்திற்கு கையளிப்பதில் முஸ்லிம் சமூக அரசியல் இயக்கம் என்ற வகையில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

வடகிழக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு நிறைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் பெரும் மரியாதை போதுமானது. இந்தியாவை மேலும் கௌரவிக்க வேண்டும் என்றால், புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்கில் கொடுக்காமல் தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் கொடுப்பது நல்லது என்பது எங்களின் கருத்தாக உள்ளது.

எமது இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்கள், பலாத்காரமாக திணித்த மாகாண சபை முறையான வெள்ளை யானையால் இந்தியாவைக் கண்டு நாம் மிகவும் பயப்படுகிறோம். இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது. அதனாலே தான் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாங்கள் கடந்த காலங்களில் பாரத தேசமான இந்தியாவை நேசித்தோம். நாங்கள் முகலாயப் பேரரசை ஏற்றுக்கொண்டோம்.  எனினும், தற்போதைய இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினர் நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் மீது காட்டும் அக்கறையாலும், தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாலும், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. போன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது.

எனவே முஸ்லிம் சமூகத்தை அவமரியாதை செய்யும் ஒரு நாட்டின் அரச தலைவருக்கு எதிராக அறிக்கை விடாமல் பயந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைக்க வேண்டாம் என கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This