இ.தொ.கா.வின் அரசியல் பலத்தினால் பெருந்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பலத்தினால் தான் பெருந்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற கடை,அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்),( திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் எத்தனை சட்டங்கள் காணப்பட்டாலும்,பெருந்தோட்டங்களுக்கு என்று தனித்த சட்டங்கள் காணப்படுகின்றன.அவை பெருந்தோட்ட கம்பனிகளின் சட்டம். சம்பள விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு தொழில் அமைச்சர் பலமுறை அழைப்பு விடுத்தும் தோட்ட கம்பனிகள் வருகை தரவில்லை.இவ்வாறான பின்னணியில் தான் விசேட வர்த்தமானி ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்துக்கான வர்த்தமானி அறிவித்ததை தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருந்தோட்ட மக்கள் பாரிய பங்களிப்பு வழங்குகிறார்கள்.ஆனால் அவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளினால் பல வழிமுறைகளில் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள்.தொழிலுக்கு வருகை தராவிட்டால் தோட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று குறிப்பிடும் நிலைமை மாற்றமடைய வேண்டும்.
குத்தகை அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன.ஆனால் இன்று கம்பனிகள் பெருந்தோட்டங்களை தமது விருப்பத்துக்கு அமைய நிர்வகிக்கின்றன. பெருந்தோட்டங்களில் வீடமைப்பு,குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை அரசாங்கமே முன்னெடுக்கிறது.இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் காணப்படுகிறது.
சம்பள விவகாரம் தொடர்பில் தற்போது விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் தரப்பினர் கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்களை நாங்கள் நன்கு அறிவோம்.சம்பள பிரச்சினைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளது. குறைகளை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் மலையக மக்களுக்கு ஒருபோதும் விமோட்சனம் கிடைக்காது.பெருந்தோட்ட மக்கள் எமது அரசியல் பலத்தினால் தான் நிம்மதியாக வாழ்கிறார்கள்.குறைகளை எளிதாக குறிப்பிடலாம்.சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.