வதந்தி பரவலைத் தடுக்கும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ‘எக்ஸ்’
தவறான தகவலைப் பரப்பும் பதிவுகளில் அதன் உண்மைத் தன்மை குறித்து பயனா்களுக்குத் தெரியப்படுத்த சரியான தகவல்களை உள்ளிடும் ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதியை பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ வலைதளம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப். 19ஆம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் சூழலில், தோ்தல் பிரசாரங்களுக்கு சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளம் வெளியிட்டுள்ள பதிவில், ‘தற்போது உலகெங்கிலும் 69 நாடுகளில் பங்களிப்பாளா்களைக் கொண்டுள்ள கம்யூனிட்டி நோட்ஸ் வசதிக்கு இந்தியாவில் இருந்து புதிய பங்களிப்பாளா்கள் இன்று இணைகிறாா்கள். வரும் நாள்களில், நாங்கள் மேலும் விரிவடைவோம். எப்போதும் போல, வெவ்வேறு கண்ணோட்டத்தில் இருக்கும் பயனா்களுக்கு இக்குறிப்புகள் உதவியாக இருப்பதை உறுதிசெய்ய அதன் தரத்தை கண்காணிப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கம்யூனிட்டி நோட்ஸ் வசதி இப்போது இந்தியாவில் செயல்பட தொடங்கியுள்ளது’ என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளா் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தாா்.