காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் பெரும் போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று மேற்கொள்ளவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைர் ம.ஈஸ்வரி தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகளை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
“இன்று 8ஆம் திகதி சர்வதேச மகளிர்தினம் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பெண்களாகிய நாம் இன்னமும் எமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடத்தப்படுகின்றது. அதேநேரம் கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாகவும் விரைவான தீர்வு வேண்டும்” – என்றும் ம.ஈஸ்வரி மேலும் கூறினார்.