ரூ.2000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இந்திய கடற்படை அதிரடி!

ரூ.2000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இந்திய கடற்படை அதிரடி!

குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர்.

இந்திய கடற்படை அதிகாரிகளுடன் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (Narcotics Control Bureau) அதிகாரிகள், அதில் இருந்த “பாகிஸ்தானியர்கள்” என சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறிய கப்பலில், 3,300 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உறைகளில் “பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது” (Produce of Pakistan) என எழுதப்பட்டிருந்தது.

இதில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ, மெத்தாம்ஃபிடமைன் (methamphetamine) மற்றும் 25 கிலோ மார்ஃபைன் (morphine) ஆகியவை இருந்தது.

சர்வதேச சந்தையில், தற்போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் குஜராத் மாநில போர்பந்தர் (Porbandar) நகருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய கடற்படையுடன் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிக பெரிய போதை பொருள் பறிமுதல் இதுதான் என கூறப்படுகிறது.

இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.

CATEGORIES
TAGS
Share This