போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
இதற்கு காரணம், இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதால் தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார். அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவர் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.