‘வெலிவிட்ட சுத்தா’ கைது!

‘வெலிவிட்ட சுத்தா’ கைது!

‘வெலிவிட்ட சுத்தா’ என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாலம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் 15 கிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

47 வயதுடைய வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த ‘வெலிவிட்ட சுத்தா’ என அழைக்கப்படும் மலலகே சுதத் கித் ஸ்ரீ எனும் குற்றவாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பல்வேறு கொலை சம்பவங்கள், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் எனவும் அவர் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே வெலிவிட்ட சுத்தாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கும் சொத்துக்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஹோமாகம மேல் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னணியில் 10 கோடி ரூபா பெறுமதியான குறித்த சொத்துகளை மீள பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் யுக்திய நடவடிக்கையின் போது குறித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இதன்போது 5 பஸ்கள்,கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு கடுவலை நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் சட்டவிரோத சொத்து பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றிருந்தனர்.

இது தொடர்பிலான ஆவணங்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைவாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தினால் அந்த சொத்துக்களை மீள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

‘வெலிவிட்ட சுத்தாவின்’ மனைவியின் உறவினர் ஒருவரின் பெயரிலேயே இந்த சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சொத்துக்கள் தொடர்பில் அவர்களால் உறுதிப்படுத்த முடியாமையால் இவற்றை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This