உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்!

உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்!

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், “விரைவிலேயே உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருக்கும்.

150 கி.மீ. சுற்றளவு: அங்கிருந்து 150 கி.மீ. சுற்றளவில் அது சேவை வழங்கும். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவர்” என்று பதிவிட்டுள்ளார். மலைப்பகுதியான உத்தராகண்டில், மக்களை அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்வது சவாலானதாக உள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் சேவையில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் உத்தராகண்ட் அமைச்சரவை இது தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், விரைவில் அம்மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சஞ்சீவி என்ற திட்டத்தின் கீழ் இந்தஹெலிகாப்டர் இயங்கும். இதற்கான சான்றிதழ் அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

CATEGORIES
TAGS
Share This