திருப்பதியில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரை தாக்கி கொன்ற சிங்கம்!
திருப்பதி மலையடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 5.30மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் (34) என்பவர் நேற்று உயிரியல் பூங்காவுக்கு வந்தார். இவர் மாலை 4 மணியளவில் கையில் செல்போனுடன் சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள், அருகில் உள்ள மரத்தின் வழியாக இறங்கியுள்ளார். அப்போது கூண்டில் இருந்த தொங்கலபூர் எனும் ஆண் சிங்கம் பாய்ந்து வந்து அவரை தாக்கத் தொடங்கியது. இதையடுத்து பிரகலாத் மீண்டும் மரத்தின் மீது ஏறி தப்பிக்க முயன்றார். எனினும் அவர் மீது சிங்கம் மீண்டும் பாய்ந்து தாக்கியது.
இதைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களின் அலறல் கேட்டுபூங்கா பாதுகாவலர்கள் அங்குஓடிவந்தனர். அவர்கள் பார்வையாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டு சிங்கங்களை பராமரிப்பவரை உள்ளே அனுப்பினர். அந்த பராமரிப்பாளர் சிங்கத்தை அடக்கி, கூண்டில் அடைத்தார். எனினும் அதற்குள் சிங்கம் தாக்கியதில் பிரகலாத் உயிரிழந்தார்.
தகவலின் பேரின் அங்கு வந்த போலீஸார் பிரகலாத்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகலாத் செல்ஃபி எடுப்பதற்காக சிங்கங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றதாக பார்வையாளர்கள் கூறினர். அவர் மனநோயாளி போல்காணப்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.