பெப்ரவரி 24 – 28 வரை பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்!
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
பெப்ரவரி 24 முதல் 28 ஆம் திகதி வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்த இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் பெப்ரவரி 24 முதல் 28 வரை 5 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.
கட்சிக்குட்பட்டு செயல்பட்டுவரும் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெறவுள்ளன.
கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் துணை நிர்வாகிகளும் தாங்கள் தொகுதி சார்ந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டங்களுக்குட்பட்ட மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை கட்சித் தலைமைக்கும், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.