விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் டெல்லி வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடுக்கப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் சொன்னதைச் செயல்படுத்த அவர்கள் தயாராக இல்லை.

விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறி உள்ளதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

இதேபோல், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதற்காக கண்ணீர் புகைகுண்டுகளால் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?

விவசாயிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு தவறிவிட்டது.

விவசாயிகளின் மீதான அடக்குமுறை தேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும். ஈகோ, அதிகாரவெறி, இயலாமை ஆகியவற்றை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள், இந்த விவசாயிகள் தான் உயர்ந்தவர்கள். நம் அனைவரையும் அவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள். அரசின் அடாவடித்தன செயலுக்கு எதிராக விவசாயிகளுக்கு நாம் துணை நிற்போம் என்றார்.

CATEGORIES
TAGS
Share This