முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் தண்டனையை முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

2021, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை(ஏககாலம்) விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16 ஆம் திகதி வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்தார். இந்த விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 9ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யது.

இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இரு வேறு அமர்வுகளில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 24 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஜனவரி 29 ஆம் திகதி நடைபெற்ற விசாரணை 31-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகாத நிலையில் அவரது தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, வாதிட கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்து, பெப்ரவரி 1-ஆம் திகதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து பெப்ரவரி 1 ஆம் திகதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ்தாஸ், தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்து தானே வாதாடினார். இதைத் தொடர்ந்து பெப்ரவரி 7ஆம் திகதி வரை வாதிட 5 நாள்கள் அவகாசம் வழங்கி முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.

தொடர்ந்து பெப்ரவரி 2,7 ஆம் திகதிகளில் ராஜேஷ்தாஸும், 5 ஆம் திகதி அவரது வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். பெப்ரவரி 6 ஆம் திகதி இருவரும் ஆஜராகவில்லை. கடந்த 7-ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது தான் வாதிடுவதற்கு மேலும் 5 நாள்கள் காலஅவகாசம் வழங்குமாறு ராஜேஷ்தாஸ் கோரினார். ஆனால், அதையேற்க மறுத்த நீதிபதி, பெப்ரவரி 09 இல் அரசுத் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி அரசு வழக்குரைஞர்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி, அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற விவாதத்தை பதிவு செய்து கொண்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா, மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு பிப்ரவரி 12(திங்கள்கிழமை) வழங்கப்படும் எனக்கூறி உத்தரவிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This