யாழ். பல்கலையின் 38 ஆவது பட்டமளிப்பு விழா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு நேற்று (11.03.2024) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழாத் தொடர்பான விபரங்களை வழங்கியுள்ளார்.
அதில், “பட்டமளிப்பு வைபவமானது பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது.
இந்த முறை நடைபெறும் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் பொன்விழா நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக இடம்பெற இருக்கின்றது.
38ஆவது பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் தங்கப்பதக்கங்களையும் புலமைப்பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப் பீடம், பொறியியற் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம், இந்துக்கற்கைள் பீடம், சித்தமருத்துவ அலகு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 441 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து எட்டு உள்வாரி மாணவர்களுக்கும், 330 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 94 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 46 தங்கப்பதக்கங்களும், 09 புலமைப்பரிசில்களும், 48 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன
வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 3.45 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.
சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை எக்ஸ்ரர் (Exeter) பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை கிலியன் ஜுலெவ் உம் (Prof. Gillian Juleff), சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை ஃபர்ஸானா எஃவ் ஹனிபா உம் (Prof. Farzana F. Haniffa) நிகழ்த்த இருக்கின்றனர்.
இந்த நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் நிறைவு பெறும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.