பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி!

பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி!

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 8-ம் திகதி, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி, 265-ல் 250 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்திருந்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதால், அதன் தலைவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

பிடிஐ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களில் வெற்றி பெற்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி (பிஎம்எல்-என்) 71 இடங்களிலும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. முத்தாஹிடா குவாமி இயக்கம் (எம்க்யூஎம்) கட்சி 17 இடங்களிலும் மற்ற இடங்களில் சிறு கட்சிகளும் வென்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாததால், அரசியல் கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு முன்வர வேண்டும் என நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியினருடன், நவாஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நவாஸ் ஷெரீப்பின் இந்த முயற்சிக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் ஆஸிம் முனிர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் இராணுவ மையங்கள் மீது கடந்தாண்டு மே 9-ம் திகதி நடந்த தாக்குதல் தொடர்பாக இம்ரான் கான் மீது 12 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஜாமீன் வழங்கி தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இம்ரான்கான் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார்.

CATEGORIES
TAGS
Share This