பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஸ் ஷெரிப்!
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி ஷெபாஸ் ஷெரிப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதன்படி கூட்டணி ஆட்சியில் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே ஷெபாஸ் ஷெரிப் பிரதமராக பதவியேற்றுள்ளார்.