பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் இம்ரான் கான் கட்சி!

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் இம்ரான் கான் கட்சி!

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தேசிய அவைக்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவர்கள் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிடிஐ கட்சியின் சட்டக் குழு தலைவர் கோஹர் அலி கான், “எங்கள் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். பாகிஸ்தான் மக்கள் கட்சி உடனோ அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உடனோ கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பே இல்லை. அவர்களுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

கைபர் பக்துன்வா மாகாணத்திலும் எங்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. அங்கும் எங்கள் ஆட்சிதான் அமையும். பிடிஐ கட்சியைச் சேர்ந்த சுயேட்சைகள் அணிமாற மாட்டார்கள். குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இருந்தாலும் அவர்கள் கட்சியின் பக்கம் உறுதியாக நிற்பார்கள்” என தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதி அமைச்சரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மூத்த தலைவருமான ஐஷக் தர், “சுயேட்சைகள் எங்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அரசியல் சாசனப்படி 72 மணி நேரத்தில் அவர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைய முடியும். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். அதேநேரத்தில், அவர்கள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று எங்களை தொடர்பு கொள்கிறார்கள்” என கூறினார்.

இதனிடையே, நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்)-ன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மரியம் நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு க்கு எதிராக சில ஊடகங்கள் நேற்றிரவு பொய் பிம்பங்களைக் கட்டமைத்த போதிலும், தேசிய அளவிலும், பஞ்சாபிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். இன்னும் சில முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அனைத்து முடிவுகளும் வெளியானதும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைமையகத்தில் வெற்றி உரையை நவாஸ் ஷெரீப் நிகழ்த்துவார். அதுவரை காத்திருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கும் (தேசிய அவை), மாகாண அவைகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் 18 ஆயிரம் வேட்பாளர்கள் களம் கண்டனர். நாடு முழுவதும் 90,675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 16,766 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டிருந்தன.

தேர்தல் பணியில் 14 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்தலை முன்னிட்டு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை முன்னிட்டு செல்போன்களுக்கான இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், பெருமளவில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

CATEGORIES
TAGS
Share This