‘மக்களை வஞ்சிக்கும் பாஜகவும், பட்நாயக்கும்’ – ராகுல் காந்தி

‘மக்களை வஞ்சிக்கும் பாஜகவும், பட்நாயக்கும்’ – ராகுல் காந்தி

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்து மக்களை வஞ்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசாவில் நியாய யாத்திரை மேற்கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஒடிசாவில் வேலையின்மை விகிதம் அபாய நிலையை எட்டியுள்ளது. சுமார் 30 லட்சம் மக்கள் வேலைக்காக ஒடிசாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் நவீன் பட்நாயக் நிர்வாகம், மத்திய அரசுடன் இணைந்து மக்களைக் வஞ்சிப்பதற்கான ஒரு ரகசிய கூட்டணியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்த கூட்டணியை உடைப்பதற்கு காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பாஜகவை பிஜேடி ஆதரிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதிலிருந்து இந்த உண்மையை நாம் அறியலாம். மாநிலத்தின் இயற்கை வளங்களையும், சொத்துகளையும் கொள்ளையடிப்பதற்கு 30 கோடீஸ்வரர்கள் ஒடிசாவுக்குள் புகுந்துள்ளனர். அவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பை மட்டுமே விதைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அவர்களது ஆட்சியில் நீதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா மக்களின் குறைகளை கேட்பதற்குத்தான் நான் இங்கு யாத்திரை மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

CATEGORIES
TAGS
Share This