மணிப்பூரில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கடந்த ஆண்டு நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டாா். கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக அந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டாா். இதன் தொடா்ச்சியாக நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, அவா் தலைமையில் காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் இருந்து தனது 2ஆம் கட்ட நடைப்பயணத்தை ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்றனர். முன்னதாக இம்பாலுக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் கோங்ஜோம் போர் நினைவிடத்திற்கு சென்றார்.
ராகுலின் முந்தைய நடைப்பயணத்தை போல் அல்லாமல், இந்த முறை பெரும்பாலும் பேருந்துகளில் நீதிப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சில வேளைகளில் நடைப்பயணமும் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பயணம், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது. மாா்ச் 20 அல்லது 21-ஆம் திகதி மும்பையில் பயணம் நிறைவடையவுள்ளது.