ஞானவாபி மசூதிக்குள் 55 இந்து தெய்வங்களின் சிற்பங்கள்!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் அறிக்கையில் 55 இந்துக் கடவுள்களின் கற்சிற்பங்கள் மசூதிக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 15 சிவ லிங்க சிலைகள், 3 விஷ்ணு சிலைகள், 3 கணேசன் சிலைகள், 2 நந்தி சிலைகள், 2 கிருஷ்ணர் சிலைகள், 5 அனுமர் சிலைகள் மசூதிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இருக்கும் ஞானவாபி மசூதியானது, இந்துக்கோயிலை இடித்து அதன் மீது எழுப்பப்பட்டிருப்பதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் ஆட்சியின்போது இங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டு, அதன்மீது இந்த இஸ்லாமியக் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சிலைகளும், தூண்களும் சிதைக்கப்பட்டு மறுபயன்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிக்குள் கைகள் இல்லாத ஆண் தெய்வத்தின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் வலது கை தூக்கி இருப்பது போன்ற வடிவிலும், இடது கை உடலின் மேல் செல்வது போலவும், வலது கால் முட்டிக்கு மேல் இருப்பதால் இது கிருஷ்ணரின் சிலையாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைப் போன்று மற்ற சிலைகள் இந்து சிலைகளென எப்படி முடிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் 93 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 40 கிழக்கிந்திய கம்பெனியின் நாணயங்களும், 21 விக்டோரிய மகாராணி நாணயங்களும், 3 இரண்டாம் ஷா அலாம்பாட்ஷா நாணயங்களும் இருந்தது கண்டறியப்பட்டது.
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டு, ராமர் கோயில் எழும்பி திறப்பு விழா நடந்துமுடிந்துள்ள நிலையில், இந்த மசூதியின் பக்கம் அனைத்து இந்து அமைப்புகளும் திரும்பியுள்ளன.