10 ஆயிரம் பேர் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்!

10 ஆயிரம் பேர் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்!

ஏறத்தாழ நான்கு கட்டடங்களை ஒன்று சேர்த்தது போல இருக்கும், உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை மியாமி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் ஐகான் ஆப் த சீஸ் (கடல்களின் சின்னம்) எனப் பெயரிடப்பட்டது. இதன் ஒட்டுமொத்த நீளம் 1200 அடி.

ஏழு நாள்கள் தீவுகளுக்கு இடையில் சுற்றுலா மேற்கொள்ளும் சொகுசு கப்பலின் முதல் பயணத்தைத் தொடங்கிவைத்துள்ளார் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி.

இந்தக் கப்பல் 20 அடுக்குகளைக் கொண்டது. 7,600 பயணிகள் வரை இதில் பயணிக்க இயலும். கப்பலின் பணியாளர்கள் 2,350 உள்பட அனைவருக்குமான தங்கும் அறைகள் உள்ளன.
கப்பலுக்குள்ளேயே ஆறு நீர்ச்சறுக்கு விளையாட்டு இடங்கள், ஏழு நீச்சல் குளம், பனிச்சறுக்கு விளையாட்டுக்கான இடம், திரையரங்கம், 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி 900 நாள்கள் எடுத்ததாகவும் இதற்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவானதாகவும் ராயல் கரிபீயன் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் நீர்மமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்க கூடியது. முழுக்கவே சூழலியல்சார் பாதுகாப்பு கொண்டிருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தாலும் இயற்கை ஆர்வலர்கள் இந்தக் கப்பலில் பயன்படும் எல்என்ஜி, மீத்தேன் மாசுவை வெளியிடும் என எச்சரித்துள்ளார்கள்.

நிலத்தில் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமான கார்பன் மாசுவை சுற்றுலாவாசிகள் ஏற்படுத்துவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடலில் நடமாடும் நகரமாக விளங்கும் இந்த சொகுசு கப்பல் கப்பல் கட்டுமானத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

CATEGORIES
TAGS
Share This