கியான்வாபி மசூதி கட்டுவதற்கு முன்னர் கோயில் இருந்துள்ளது: இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்!

கியான்வாபி மசூதி கட்டுவதற்கு முன்னர் கோயில் இருந்துள்ளது: இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக சர்ச்சை எழுந்தது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், மசூதிக்குள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள ஆய்வு நடத்த வேண்டும். அங்கு கோயில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வாராணசி மாவட்ட நீதிபதி அஜயா கிருஷ்ண விஷ்வேஷா கடந்த ஆண்டு ஜூலை 21-ம்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தின.

அதன் அடிப்படையில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டர் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட்டது. கள ஆய்வு முடிந்த நிலையில் 839 பக்க ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது. அதன் நகல்கள் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:

கியான்வாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. மேற்கு பகுதியில் தற்போதுள்ள சுவர், இந்து கோயிலின் மீதமுள்ள சுவர். இந்தச் சுவர் செங்கற்களாலும், ‘மோல்டிங்’ சிற்பங்களாலும் கட்டப்பட்டுள்ளது. அங்கு முன்பு இந்து கோயில் இருந்துள்ளது.

கள ஆய்வின் போது கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை காட்டுகின்றன.

மசூதி கட்டுவதற்கு ஏற்கெனவே இருந்த தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அரபு – பாரசீக கல்வெட்டு காணப்பட்டது. அது,அவுரங்கசீப்பின் 20-வது ஆட்சிஆண்டில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக (1676-77) குறிப்பிடுகிறது. எனவே, 17- ம் நூற்றாண்டில் அவரது ஆட்சியின் போது ஏற்கெனவே அங்கு இருந்த கட்டிடம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This