எம்மவர்கள் சற்று வித்தியாசமாக சிந்திப்பது எமது இளைய சந்ததியின் மீட்சிக்கு வழிவகுக்கும்!
சில மாத இடைவெளிக்குப் பின்னர் அண்மையில் கொழும்பு சென்று அங்கு ஒருசில நாட்கள் தங்கியிருந்தேன். 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் கண்டி செல்வதற்காக கொழும்பு சென்றிருந்தாலும் அங்கு தங்கியிருக்கவில்லை.
கொழும்பு மக்களின் நிலை நிறையவே மாறியிருப்பது தெரிந்தது. காலி வீதியில் கடைகளுக்கு முன்னால் இருக்கும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காகியிருந்தது.
பம்பலப்பிட்டியின் பிரபல பல்கடைத் தொகுதியில் கூட்டம் பெருமளவில் குறைந்திருந்தது. செல்லிடத் தொலைபேசி விற்கும் அநேகமான கடைகளில் தொலைபேசிகளன்றி தொலைபேசிக் கவர்களே விற்பனைக்கு இருந்தன. Gall face புதிதாக திறக்கப்பட்ட ஷாப்பிங் காம்ப்லெஸில் கூட்டம் இருந்தாலும் பெரும்பாலானோர் பார்வையாளர்களாகவே இருந்தனர்.
வெள்ளவத்தையில் மாலைநேரம் சாப்பாடு வாங்கச் சென்றிருந்த சமயம் படிக்கும் இளைஞர்கள் இருவர் இரு அடுத்தடுத்த நாட்களில் தங்களுக்கும் சாப்பாடு வாங்கித் தருமாறு கேட்டனர். அவர்கள் A/L இன் பின்னர் மேற்படிப்பு ஏதாவது படிப்பதற்காக வடக்கிலிருந்து வந்து கொழும்பில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
அவர்களுக்கு நான் வாங்கிய சாப்பாட்டைகொடுத்தேன். அவர்களின் விபரங்கள் எவற்றையும் கேட்டு அவர்களை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அவர்களும் என்னோடு பேச்சுக் கொடுக்க விரும்பவில்லை. சாப்பாட்டுப் பார்சலை வாங்கிக்கொண்டு நன்றி கூறி விரைவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
ஆனால் இந்த சம்பவங்கள் நாட்டில் இளையோர் அல்லது அடுத்த தலைமுறையினர் பெரும் பிரச்சினையில் உள்ளனர் என்பதனை மட்டும் உணர்த்தின.
சுமார் 35 முதல் 40 வருடங்குக்கு முன்னர் வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்களுக்கு உள்நாட்டுப் போர் காரணமாக பெரும் பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டது. அவர்களும் இதேபோல எதிர்காலம் தொடர்பில் நிச்சயமர்வர்களாக இருந்தனர்.
அப்பொழுது நாங்கள் சிறுவர்களாக இருந்தோம். பலர் கல்வியை இடைநிறுத்தி அகதிகளாக மேற்கத்தைய நாடுகளுக்குச் சென்றனர். அப்பொழுது அநேகமான மேற்கத்தைய நாடுகள் அவர்களுக்கு புகலிடமளித்தன. அவர்கள் அங்கு தங்களை படிப்படியாக நிலைநிறுத்தி பின்னர் தங்களின் குடும்ப அங்கத்தவர்களையும் அந்த நாடுகளுக்கு அழைத்துக்கொண்டார்கள்.
அவர்களும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களும் இன்று தமிழ் டயஸ்போரா என்ற வகையினுள் பெரும் பொருளாதார சக்தி வாய்ந்தவர்களாக விளங்குகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டின் தலைவர்களுடன் பொருளாதார பேரம் பேசும் நிலைக்கு உயர்த்துள்ளார்கள்.
வடக்கு கிழக்கின் இளைஞர்களின் இன்றைய பொருளாதாரபிரச்சனைகளுக்கும் தமிழ் டயஸ்போராக்களால் காத்திரமான பங்களிப்பை வழங்கமுடியும். இதற்காக அவர்கள் இலவசமாக எதையும் செய்யவேண்டும் என்பதல்ல எதிர்பார்ப்பு.
இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கூடிய குறிப்பாக தாயகத்தில் இருந்தபடியே அந்நியச்செலாவைணியை ஈட்டக்கூடிய ஒன்லைன் அக்கௌன்டடிங், ஆடிட்டிங் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவங்களுக்கான சேவைகளை வழங்கும் வலையமைப்பை இங்கு விஸ்தரிப்பதற்கு அவர்கள் முதலிட வேண்டும். இதன் மூலம் கணிசம்மான மேற்படிப்பைத் தொடரும் இளைஞர், யுவதிகளுக்கு பகுதி நேர வருவாயொன்று கிடைக்கும் வழிவகைகள் ஏற்படும்.
இது அவர்களையும் குடும்பத்தவர்களையும் ஓரளவு பொருளாதாரச் சுமையிலிருந்து விடுவிக்கும். அத்துடன் முதலிட்டவர்களுக்கும் இலாபம் கிடைக்கும்.
கல்யாண மண்டபங்களில் முதலிட்டும் கோவில் திருவிழாக்களில் அதனை செலவிட்டும் தங்களின் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை தொலைத்திடும் எம்மவர்கள் சற்று வித்தியாசமாக சிந்திப்பது எமது இளைய சந்ததியின் மீட்சிக்கு வழிவகுக்கும்.
விநோதன்