நாரம்மல சம்பவம்: காவல்துறையினர் பணிநீக்கம்!

நாரம்மல சம்பவம்: காவல்துறையினர் பணிநீக்கம்!

நாரம்மல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உப பரிசோதகர் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான காவல்துறை உப பரிசோதகர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாரம்மல நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் வீட்டிற்கு இன்றைய தினம் 3 பேர் கொண்ட குழுவொன்று சென்று விசாரணை நடத்தியதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மஹரச்சிமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

கிரியுல்ல நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றை நேற்றிரவு 7 மணியளவில் நாரம்மல நகரில் வைத்து சிவில் உடை அணிந்திருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அதனை மீறி பயணித்த பாரவூர்தியை காவல்துறை உத்தியோகத்தர்கள் உந்துருளியில் துரத்தி சென்று நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பாரவூர்தியின் சாரதி இருக்கையில் இருந்த நபரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய போது தவறுதலாக துப்பாக்கி இயங்கிதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, சிவில் உடையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் அவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதுடன், துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This