போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் – அவசியமான பணிகள் முன்னெடுப்பு!
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையின் போது முதலுதவி தொடர்பான வினாக்களையும் உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே தற்போது நடைமுறையில் உள்ளது.
போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை மேல் மாகாணத்திலும், தென்மாகாணத்திலும் செயற்படுத்தப்பட்டது.
இந்த வருடத்தில் குறித்த திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிலவும் பிரச்சினைக்கு ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்காமல் ஒரு நாள் சேவையில் நிரந்தர அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பை, அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் ஒப்படைக்கும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்
சாலை பாதுகாப்பு நலன் கருதி, விபத்துகளை குறைக்க வேகத்தடை செயல்முறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் சுமார் 8.9 மில்லியன் வாகனங்கள் மற்றும் 8.5 மில்லியன் உரிமம் பெற்ற சாரதிகள் உள்ள நிலையில், ஆண்டு இறுதிக்குள் உரிமங்களை வழங்கும் அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் தரப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.