வெடி குண்டு மிரட்டல்களுடன் அடிக்கடி தரையிறங்கும் இந்திய விமானங்கள்: பாதுகாப்புச் சபையில் தீவிர அவதானம்
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முப்படை பிரதானிகள், அரச பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள், துறைசார் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, அறுகம்பே விவகாரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், குறித்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றன் பின்னர் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று தொடர்ந்து இலங்கைக்கு வரும் சில அச்சுறுத்தலான தகவல்கள் குறித்து எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பின்றி பலப்படுத்துவதற்கான பொறிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வெடி குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு தொடர்ச்சியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் இந்திய விமானங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இவ்வாறு விடுக்கப்படும் வெடி குண்டு மிரட்டல்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தொடரும் அச்சுறுத்தல்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை பாதிக்கக்கூடும் என்றும், இது சுற்றுலாத் துறையின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்புவதாகவும் அதிகாரிகளால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விமானம் இலங்கை வான் எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர். இந்திய வான் பரப்புக்கு அருகிலுள்ள விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ளதால், மிரட்டல்கள் விடுக்கப்படும் அனைத்து விமானங்களும் பாதுகாப்பு சோதனைக்காக இங்கு திருப்பி விடப்படுகின்றன.
அண்மையில் எவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு தரையிறக்கப்பட்ட மூன்று விமானங்கள் குறித்தும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 19, 24 திகதிகளில் இந்தியாவின் மும்பையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இரண்டு விஸ்தாரா எர்லைன்ஸ் விமானங்கள் வெடி குண்டு மிரட்டல் காரணமாக இவ்வாறு அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தன.
அதேபோன்று கடந்த 28ஆம் திகதி இந்தியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான AI-281 என்ற விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.