விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியவர்; மனநிலம் பாதிக்கப்பட்டவர்!
கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவன முகாமையாளருக்கு போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, நீர்கொழும்பு குற்றவியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கடந்த 27ஆம் திகதி தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆராயும் போது அந்த தகவல் போலியானது என தெரிய வந்த பின்னர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, நீர்கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை நடத்தி, அழைப்பை மேற்கொண்ட தொலைபேசியின் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்நது, வாரியபொல பொலிஸாருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தனக்கு தோன்றியமையால் அவ்வாறான ஒரு அழைப்பை மேற்கொண்டதாக விசாரணைகளின் போது சந்தேகநபர் கூறியுள்ளார்.
மேலும், சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.