மதுவரி உரிமக் கட்டணங்கள் திருத்தம்!
வருடாந்த மதுவரி உரிமக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதாரம், ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பனை சாராயம் நீங்கலாக வருடாந்த மதுபான உற்பத்தி உரிமக் கட்டணம் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கட்டணம், 10 லட்சம் ரூபாயாக இருந்தது.
250,000 ரூபாவாக இருந்த பனை மதுபான உற்பத்தி நிலைய உரிமக் கட்டணம் 50 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கள் போத்தல் செய்வதற்கான உரிமக் கட்டணம் 10 இலட்சம் ரூபாவிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், வினிகர் தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் 05 இலட்சம் ரூபாவிலிருந்து 25 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கட்டண திருத்தத்தின்படி மதுபானங்களுக்கான ஆண்டு மொத்த விற்பனை உரிமக் கட்டணம் 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்பு ரூ.10 லட்சமாக இருந்தது.
மதுபான சில்லறை விற்பனை உரிமக் கட்டணம் மாநகர சபை பகுதிகளுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாயாகவும், நகர சபை பகுதிகளுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாயாகவும், மற்ற பகுதிகளுக்கு ஒரு கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்களுக்கான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதுடன், 200 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட ஹோட்டல்களுக்கு 10 இலட்சம் ரூபாவாகவும், 20 முதல் 199 அறைகளைக் கொண்ட ஹோட்டல்களுக்கு 05 இலட்சம் ரூபாவாகவும், 20 அறைகளுக்கு குறைவான ஹோட்டல்களுக்கு 250,000 ரூபாவாகவும் உரிமக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
விடுதி உரிமக் கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கழகங்களுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
05 இலட்சம் ரூபாவாக இருந்த தனியுரிமை கழக அனுமதிப்பத்திரக் கட்டணம் 250,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், மாநாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான கழகங்களுக்கான உரிமக் கட்டணமானது திருத்தமின்றி 250,000 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கசினோ சூதாட்ட வியாபாரங்களில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை ஜனவரி 12ஆம் திகதி முதல் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒவ்வொரு பிரிவின் கீழும் வழங்கப்படும் உரிமக் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், உரிமம் வழங்கும் நடைமுறையும் திருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு கசினோ சூதாட்ட வர்த்தகங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது புதிய வர்த்தமானியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.