இனி செல்போன் தேவையில்லை!

இனி செல்போன் தேவையில்லை!

அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க். (Rabbit inc.) லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் – 2024 (CES – 2024) நிகழ்ச்சியில் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தன் போட்டியாளர்களை மிரளவைத்துள்ளது. கையடக்க கருவி ஒன்றினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிறுவனம் அதன் பயன்பாடுகளைக் காணொலி ஒன்றின் மூலம் விளக்கியுள்ளது.

இந்தக் கையடக்க கருவியின் மூலம் குரலைக் கொண்டு பல வேலைகளைச் செய்யலாம். ஏற்கனவே இதே வசதியை அறிமுகம் செய்த மற்ற நிறுவனங்கள், வெறும் பாடல்கள் கேட்பதற்கும், கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்குமே பயன்பட்டு வந்த நிலையில், இந்த புதிய ரேபிட், அதையும் தாண்டி பல வேலைகளைச் செய்கிறது.

அதாவது, இந்தக் குட்டி கருவியிடம் நீங்கள் ‘எனக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கார் வேண்டும், அப்படியே வீட்டிற்கு ஒரு பிரியாணி ஆர்டர் செய்துவிடு. அதோடு நான் விளையாட வரவில்லை என என் நண்பர்களிடம் சொல்லிவிடு’ எனச் சொன்னால் போதும், உங்களது ஊபர் (uber) கணக்கிற்குள் சென்று உங்கள் முகவரிக்கு ஒரு காரை அதுவே பதிவு செய்து அனுப்பிவிடும், உங்களுக்கு விருப்பமான கடையில் பிரியாணி ஆர்டர் செய்து வீட்டு முகவரிக்கு அனுப்பிவிடும். உங்களை விளையாட அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நீங்கள் வரமாட்டீர்கள் என குறுஞ்செய்தியும் அனுப்பிவிடும்.

வெறும் குரல்வழிக் கட்டுப்பாடு மட்டுமல்லாமல், இதிலுள்ள 360 கோணங்களில் திரும்பக்கூடிய கேமரா மூலம் பார்க்கவும் செய்கிறது. இதிலுள்ள கேமராவை ஆன் செய்து, சமையலரையில் காய்கறிக்கூடையைக் காட்டி இதை வைத்து என்ன சமையல் செய்யலாம் எனக் கேட்டவுடன், இருக்கும் பொருள்களை வைத்து என்ன செய்யலாம் என்ற சமையல் குறிப்புகளையும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் இதற்கு புதிய வேலைகளையும் கற்றுக்கொடுக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜும் அளிக்கப்படுகிறது. தொடுதிரை, ஸ்பீக்கர்ஸ், கேமரா மற்றும் 1000 mAh பேட்டரி திறனையும் கொண்டுள்ளது இந்த ரேபிட். புளூடூத் மற்றும் வைபை வசதிகளும், ஒரு சிம்கார்ட் பொருத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே முன்பதிவுகள் குவிந்துவருவதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This