‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – மம்தா பானர்ஜி எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – மம்தா பானர்ஜி எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 15-ம் திகதிக்குள் பொதுமக்கள் தங்கள் ஆலோசனையை கூறலாம் என இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இக்குழுவின் செயலாளர் நிதின் சந்திராவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-52-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர்ந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த நிலை மாறியது. இந்த சூழ்நிலையில், மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் தேர்தலை நடத்தினால் அது நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பையே வலுவிழக்கச் செய்துவிடும்.

உண்மையான ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி உணர்வுக்கு எதிரான, தன்னிச்சையாக எடுத்த முடிவை திணிக்க மத்திய அரசுமுயற்சிக்கிறது. இது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்.

மேலும் மக்களவையோ, சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This