உலக அளவில் டிசம்பர் மாதம் மட்டும் கொவிட் தொற்றுக்கு 10,000 பேர் உயிரிழப்பு!
உலக அளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கொவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்து கூறியது: “கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கொவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 50 நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42% அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 62% அதிகரித்துள்ளது.
கொவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தடுப்பூசி போடுதல், கொவிட் பரிசோதனை மேற்கொள்ளுதல், தேவைப்படும் இடங்களில் முகக்கவசங்களை அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மக்கள் அதிகமாக கூடுதல், பருவ சூழல் மாறுபாடு இந்த பாதிப்புக்கு காரணமாக அறியப்படுகிறது. இருப்பினும் கொவிட் தொற்று கடந்த ஒரு மாதத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குளிர் காலம் என்பதால் கொவிட் தொற்று வேகமாக பரவி இருக்கிறது. இந்த தாக்கம் ஜனவரி மாதம் வரை தொடரலாம்” என்றார்.