நாட்டின் தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம்!
மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில் இந்தியாவின் தூய்மையான மாநிலமாக மகாராஷ்டிரா தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில், கடந்த 2016 முதல் மத்திய அரசு தூய்மைக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ‘ஸ்வச் சர்வேக் ஷன்’ விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 2023-ம் ஆண்டுக்கான தரவரிசையை மத்தியவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கான தரவரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம் 2-வது இடத்திலும் சத்தீஸ்கர் 3-வது இடத்திலும் உள்ளன.
இதுபோல் மத்திய அரசின் தூய்மையான நகரங்களுக்கான தரவரிசையில் மத்தியபிரதேசத்தின் இந்தூரும் குஜராத்தின் சூரத் நகரமும் முதலிடத்தை பிடித்துள்ளன. நவி மும்பை 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தூர் 7-வது ஆண்டாக, நாட்டின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 1 லட்சத்துக்கு கீழ் மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் மகாராஷ்டிராவின் சாஸ்வாத் முதலிடம் பிடித்துள்ளது. சத்தீஸ்கரின் பதான் இரண்டாவது இடத்தையும் மகாராஷ்டிராவின் லோனாவ்லா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2023-ம் ஆண்டுக்கான ‘ஸ்வச் சர்வேக் ஷன்’ கணக்கெடுக் கெடுப்பில் 4,447 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றன. 12 கோடிக்கும் அதிகமாக மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ‘ஸ்வச் சர்வேக் ஷன்’ விருதுகளை வழங்கினார்.