அரச வருவாயை அதிகரிக்க உள்ளூர் மக்களிடம் இருந்து வரி!

அரச வருவாயை அதிகரிக்க உள்ளூர் மக்களிடம் இருந்து வரி!

இலங்கையில் செயற்படுவதற்காக பத்து புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே இரத்தின தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சூதாட்ட விடுதிகள் தொடர்பான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஐந்து வருட காலத்திற்கு உரிமம் வழங்கும்போது 500 மில்லியன் வசூலிக்கப்படும்.

அத்துடன் சூதாட்ட விடுதிகளுக்கான நுழைவுக் கட்டணத்தையும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தாமல் இருப்பதே தமது நோக்கமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சூதாட்ட விடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டும், இதனால் அரச வருவாயை அதிகரிக்க முடியும்.

இல்லாவிட்டால், அரச வருவாயை அதிகரிக்க உள்ளூர் மக்களிடம் இருந்து வரி வசூலிக்கவேண்டியிருக்கும்.

அத்துடன் வரிகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட பேசிய தேரர், கண்டியில் உள்ள இரண்டு புதிய சூதாட்ட விடுதிகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் கண்டியில் புனித தந்தத்தை வழிபட்ட பின்னர் மக்கள் சூதாட்ட விடுதிகளுக்கு வருவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

CATEGORIES
TAGS
Share This