சம்பளமும் இல்லை.. வீடும் இல்லை.. காணியும் இல்லை..: அரசாங்கத்தை கடுமையாக தாக்கிய மனோ

சம்பளமும் இல்லை.. வீடும் இல்லை.. காணியும் இல்லை..: அரசாங்கத்தை கடுமையாக தாக்கிய மனோ

1,700 ரூபா சம்பளம் என்றார்கள். அது இன்னமும் இழுபறியில் உள்ளது. 1,000 ரூபாவும் முழுமையாக கிடைப்பதில்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ.500 தரப்படுகிறது. ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன்,

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கிய 10,000 வீட்டு திட்ட உறுதி மொழியை நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி வைப்போம். தற்போது அதில் காணப்படும் ஊழல் – மோசடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

10 பேர்ச் காணி தருகிறேன் என்றாகள். அதற்கு 4,000 மில்லியன் அதாவது, 400 கோடி ஒதுக்கி உள்ளேன் என்றும் கூறினார்கள். இன்று, காணியையும் காணோம். காணிக்கு ஒதுக்கிய பணத்தையும் காணோம்.

ஆகவே சம்பளமும் இல்லை. வீடும் இல்லை. காணியும் இல்லை. நீங்கள் எமது மக்களுக்கு ஒன்றும் தரவில்லை. தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வர இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கும் சூழலில் தோட்ட லயன்களை “கிராமம்” என்று அறிவிக்க போகிறோம் என சொல்கிறீர்கள்.

இது தேர்தல் குண்டு மாத்திரம் அல்ல, நமது மக்களுக்கு காணி வழங்காமல், தொடர்ந்தும் அவர்களை ஒதுக்கப்பட்ட மக்களாக மலை உச்சிகளில், இருநூறு ஆண்டுகளுக்கு பிறகும், பழங்குடி மக்களாக வைக்க முனையும் சமூக அநீதி.” எனவும் கூறினார்.

CATEGORIES
Share This