காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!
புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார்.
இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை மறுத்த காம்ப்ளே, “நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்” என்று கூறியுள்ளார்.
காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயலின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.