நடுவானில் தெறித்த விமான ஜன்னல் கதவு!
அமெரிக்காவின் அலாஸ்கா ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஜன்னல் கதவு ஒன்று தெறித்துப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிஃபோா்னியா மாகாணம், ஆன்டரியோவிலிருந்து உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.52 மணிக்குப் புறப்பட்ட போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஜன்னல் கதவு ஒன்று எதிா்பாராத விதமாக திடீரென தெறித்துப் பறந்தது.வான்வெளியைவிட விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் அதிகமிருக்கும் என்பதால் உடைந்த ஜன்னல் வழியாக காற்று வேகமாக வெளியேறி செல்லிடப் பேசி உள்ளிட்ட சில பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டன.எனினும், அந்த ஜன்னலோர இருக்கையில் பயணிகள் இல்லாததால் மிகப் பெரிய ஆபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. ஜன்னல் கதவு உடைந்ததும் விமானம் அவசரமாக மீண்டும் ஆன்டரியோ விமானத்துக்குத் திருப்பப்பட்டு மாலை 5.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எனினும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து 737-9 ரக விமானங்களின் பயன்பாட்டையும் அலாஸ்கா ஏா்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.